கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நிறைவு


 


இந்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை மாநகராட்சி ஒத்துழைப்புடன் கோவிட்-19 தொற்று அதிகம் பாதிப்புள்ள 23, 24, 25, 28 மற்றும் 48 ஆகிய ஐந்து வார்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் 28.09.2020 அன்று தொடங்கி 02.10.2020 வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மதுரை மாநகராட்சியின் முதன்மை நகர் நல அலுவலர் திரு குமரகுருபரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  மதுரை மாநகராட்சி மண்டலம்-1 ன் உதவி ஆணையர் திரு சேகர் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் கள விளம்பர  உதவி அலுவலர் திரு வேல்முருகன் மற்றும் பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


பிரச்சாரத்தின் முதல்நாள் வார்டு 23ல்  சொக்கநாதபுரம் மற்றும் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பீபீ குளம் உழவர்சந்தை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்யப்பட்டது.


 இரண்டாம் நாள் வார்டு எண் 28 ல் உள்ள வளர் நகர், பாலாஜி நகர், அம்பலக்காரன் பட்டி மற்றும் உத்தங்குடி பகுதிகள் மற்றும் கோ.புதூர் பேருந்து நிலையம், எஸ்.எஸ்.காலனி மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.


மூன்றாம் நாள் வார்டு எண் 24ல் உள்ள திருப்பாலை, லேக் ஏரியா, பேங்க் காலனி, விஸ்வநாததாஸ் நகர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா நகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.


நான்காம் நாள் பிரச்சாரம் வார்டு எண் 25 ல் உள்ள மூன்று மாவடி, கண்ணனேந்தல், தாகூர் நகர், மீனாட்சி அம்மன் நகர் மற்றும் சூர்யா நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.


இறுதிநாள் பிரச்சாரம் வார்டு எண் 48ல் உள்ள ஆத்திகுளம், ஏஞ்சல் நகர், கங்கை வீதி, முல்லை வீதி, கேசவசாமி வீதி மற்றும் கனகவேல் நகர் பகுதிகளில் நடைபெற்று இறுதியாக மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.


பிரச்சாரம் மேற்கொண்ட ஐந்து நாட்களும், அனைத்து பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள், விளம்பர சிற்றேடுகள் விநியோகிக்கப்பட்டன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் அரசின் ஆணைகளை மதித்து நடத்தல் ஆகியவற்றின் முக்கியத்தும் குறித்த ஆடியோ ஒலிபரப்பும் மற்றும் போஸ்டர் கண்காட்சியும் இடம்பெற்றது.


நிகழ்ச்சியான ஏற்பாடுகளை கள விளம்பர உதவி அலுவலர் திரு வேல்முருகன் செய்தார்.