"போஷன்அபியான்", "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள்" மற்றும் "பிரதமரின் மக்கள் நிதி திட்டம்' குறித்த மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்


மத்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக "போஷன்அபியான்", "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள்" மற்றும் "பிரதமரின் மக்கள் நிதி திட்டம்' குறித்த மெய்நிகர் காணொளி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மதுரை மாவட்ட சமூகநல அலுவலகம், தேனி தர்மத்துப்பட்டி ஏ.எச்.எம்.டிரஸ்ட் மற்றும் தேனி மாவட்ட சைல்ட்லைன் ஆகிய துறைகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.  


நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் காமராஜ் தனது உரையில் “இன்று நாம் இக்கட்டான சூழ்நிலையில்உள்ளோம், கொரோனாவுடன் வாழ பழகி விட்டோம் என்று சொன்னாலும் எண்ணிக்கையளவில் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டு வருவது வருத்தத்திற்குரியது; மத்திய மாநில அரசுகள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இருக்கிறார்கள். நான்கு கட்ட ஊரடங்குகளை அமல்படுத்தி தற்போது பொருளாரதாரத்தை மீட்டெடுக்க ஏறக்குறைய அனைத்து செயல்பாடுகளுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு நம்மிடம் வேண்டுவது பொறுப்புணர்வுதான். எனவே பொதுமக்களுக்கான பொறுப்பு அதிகமாகியுள்ளது  என்று குறிப்பிட்டார். கொரோனாவை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதுடன், நம்முடைய குடும்பத்தாரிடம், நாம் வசிக்கும் தெருவில் இருப்பவர்களிடம் என அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.


தமிழ்நாட்டில் ஆறாயிரம் என்றும் இந்தியாவில் தொண்ணூறாயிரம் என்றும் குறையாமல் புதிய தொற்று ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்பது லட்சம் பேர் உலக அளவில் இறந்திருக்கின்றனர், இந்தியாவில் எண்பதாயிரம் பேர் மற்றும் தமிழகத்தில் சுமார் எட்டாயிரம் பேர் இறந்துள்ளனர். இனி நாம் அலட்சிய உணர்வை கைவிடவேண்டும் என்பதையே இது குறிப்பிடுகிறது. கொரோனா காலத்தில் தான் நோய் எதிர்ப்பு சக்தியை பற்றி நாம் அதிகம் உணர்கின்றோம், இயற்கையிலேயே நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது தாய்ப்பால். தாய்ப்பால் குறித்து ஆகஸ்ட் மாதத்தில் விவாதித்தோம். இந்த செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதம். இதில் நாம் ஊட்டச்சத்தை பற்றி விவாதிக்கின்றோம். நமது பாரம்பரிய உணவு மற்றும் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் இஞ்சி மற்றும் மிளகு போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. 


மத்திய அரசும், இந்த வருடம் அனைவருடைய வீட்டிலும் கிச்சன் கார்டன் அமைத்து நமக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை நாமே உற்பத்தி செய்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் எடை குறைந்த குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து  அவர்களையும் மேம்பாடு அடையச் செய்யவேண்டும் என்று இரண்டாவது வேண்டுகோளையும் விடுத்துள்ளது.  நம்முடைய நாட்டிலே பெண்களை தெய்வமாகப் போற்றி வருகிறோம். ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக ”ஸ்ப்ளிட் பெர்சனாலிடியாக” இருக்கிறோம்.  ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயமாகவே நம் சமுதாயம் இருக்கின்றது. நாம் திருந்த வேண்டிய சூழ்நிலையிலே இருக்கின்றோம் என்பதை கருத்தில் கொண்டு குடும்ப அளவிலே பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டால் எதிர்காலத்தில் சமுதாய அளவிலே மாற்றம் ஏற்படும் என்று காமராஜ் மேலும் பேசினார்.


போஷன் அபியான் மற்றும் பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக மாவட்ட திட்ட அலுவலர்(பொறுப்பு) மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சாந்தி தனது சிறப்புரையில் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் களைவதற்கு நாட்டில் எத்தனையோ துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டாலும் இன்னும் இக்குறைபாடு குழந்தைகளிடமும், வளர் இளம்பெண்களிடமும், கர்ப்பிணித் தாய்மார்களிடமும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடமும் காணப்படுகிறது. இதனை நீக்குவதற்கு நமதுபாரத பிரதமர்அவர்கள் போஷன் அபியான் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்.


மேலும், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடி வருகிறோம். இந்த வருடத்தின் கரு என்னவென்றால், குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவது, கிச்சன் கார்டன்களை உருவாக்குவது மற்றும் சுகாதார பழக்க வழக்கங்களைக் கையாள்வது ஆகும்.  ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதில் தன் சுத்தத்தின் பங்கினை மாவட்ட அளவிலே தற்போது முன்னெடுத்து செல்வதாக திருமதி சாந்தி குறிப்பிட்டார்.  போஷன் அபியான் திட்டம் 2017-18ல் ஆரம்பிக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்கள் இடம் பெற்றன.  தற்போது அனைத்து மாவட்டங்களும் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


குழந்தைகளிடம் காணப்படும் குள்ளத்தன்மையை குறைப்பது, வளர்இளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களிடம் காணப்படும் ரத்தசோகையை குறைப்பது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாக  சாந்தி குறிப்பிட்டார். ரத்தசோகையை குறைப்பதில் முருங்கைக்கீரையின் பங்கு முக்கியம் என்றும் அதிலிருந்து சுவையாக உணவு தயாரிப்பது குறித்தும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.  வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்தும், யார் யாருக்கு எவ்வளவு ஹீமோகுளோபின் இருக்கவேண்டும் என்பதையும் அவர் விளக்கினார். குழந்தைக்கு சீம்பாலின் அவசியம், முதல் ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது, ஆறுமாதம் முதல் இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் இணை உணவு கொடுப்பது அதனுடைய வளர்ச்சிக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கும் என்பது குறித்தும் சாந்தி கூறினார்.


பெண்களுக்கான திட்டங்கள் குறித்து பேசுகையில் சாந்தி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகியன குறித்து விரிவாக எடுத்துரைத்து இவை யாவும் பெண்குழந்தையின் கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்று கூறினார்.


பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பேசிய மாவட்ட பாதுகாப்பு அலுவலர்  வாசுகி, குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் 2006, வரதட்சணை தடுப்பு சட்டம் 1961, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் 2005, பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் பாதுகாப்பு சட்டம் 2007 பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013 குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பெற்றோர் குழந்தைகளிடம் அதிகமாக நேரம் செலவழித்து அவர்களிடம் அன்பாக பேசி அவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை தைரியமாக எடுத்துரைக்கும் வண்ணம் பழக்க வேண்டும் என்றும் முடிந்த அளவு வீட்டிற்குள் ஏற்படும் பிரச்சனைகளை வீட்டிற்குள்ளேயே சுமூகமாக பேசித் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்றும் வாசுகி வேண்டுகோள் விடுத்தார்.


பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் குறித்து பேசிய மதுரை சவுத் இந்தியன் வங்கியின் நிதிசார் ஆலோசகர் சின்னதுரை, இந்த கணக்கு துவங்க எந்த இருப்பிட சான்றிதழும் தேவையில்லை; தாமே சுயசான்றொப்பம் கொடுக்கலாம்; எனினும் ஆதார்கார்டு இருந்தால் உடனடியாக வங்கி கணக்கு துவங்கலாம் என்றும், இந்த கணக்கை நிர்வகிக்க குறைந்தபட்ச இருப்புதொகை தேவை இல்லை என்றும், இக்கணக்கை வைத்திருப்பவர்கள் ரூபே ஏ.டி.எம். கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொண்டு 2,00,000 ரூபாய் வரை விபத்து காப்பீடு பெறலாம் என்றும், வங்கியுடன் சுமூக உறவு வைத்திருக்கும் ஒரு நபர் வங்கி மேலாளரின் ஒப்புதலோடு பத்தாயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்றும் தெரிவித்தார். அரசினுடைய பணபலன்கள் பெற இக்கணக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


தமிழ்நாடு தன்னார்வ சுகாதார கூட்டிணைப்பின் தலைவர் ஸ்டெல்லா வாழ்த்துரை வழங்கினார்.  ஏ.எச்.எம்.டிரஸ்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முகமது ஷேக் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியில் தேனி சைல்ட்லைன்ஐ சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி மஞ்சு நன்றி தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


 


Popular posts
மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நிறைவு
Image
ஈரோடு மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2020 சிறப்பு தள்ளுபடி விற்பனைக்கு ரூ.2.70 கோடி இலக்கு: ஆட்சியர் கதிரவன் தகவல்
Image
அக்.10ம்தேதி டிஜிட்-ஆல் சங்கமம் மெய்நிகர் உச்சி மாநாடு
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image