ஒருங்கிணைந்த ஆயுஷ் அமைப்பின் மருத்துவம் கோவிட்-19 நோயாளிகளைக் குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருந்தது


 


கோவிட் 19 தொற்றுநோய் "வரும் முன் காப்போம்“ என்ற பழமொழியின் நம்பிக்கையையும், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் உருவாக்கியுள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம், வாழ்க்கை முறை மாற்றம், உணவு மேலாண்மை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்றைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் ஆயுஷ் மருத்துவ முறைகளின் முழுமையான அணுகுமுறை குறித்து அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் ஆலோசனைகளை அனுப்பியது. காரணிகளைத் தவிர்ப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது, தடுப்புக் காரணிகளை ஹோமியோபதி வலியுறுத்துகிறது . கோவிட் -19 சிகிச்சையிலும் முன்தடுப்பிலும் இந்திய மருத்துவம் அளிக்கும் மகத்தான ஆதரவை உணர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சித்த பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


 


அதன்படி, மாநிலத்தில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் கீழ் 75,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் மாவட்டத்தில் சித்தா பராமரிப்பு மையம் திறக்கப்படும் என்று, திருச்சிராப்பள்ளி மாவட்ட சித்தா மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்தார். மேலும், கருர் மற்றும் பெரம்பலூரில் தலா 200 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டது என்றார். அரியலூரில், 100 படுக்கை வசதி சித்த மருத்துவ மையத்தை அரசுத் தலைமைக் கொறடா திரு. தாமரை ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி டி ரத்னா ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். ஒவ்வொரு சிறப்பு மருத்துவ மையத்திலும் ஒரு அலோபதி மருத்துவர் ஒரு சித்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உட்பட 8 சுகாதார ஊழியர்கள் இருப்பார்கள், சித்த மருத்துவ மையங்களில் சித்த மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.


 


கோவிட்-19 நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்துகளுடன் சத்தான உணவும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஐந்து நாட்களுக்கு சிறப்பு யோகா பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. பெரும்பாலான நோயாளிகள் ஏழு நாட்கள் சிகிச்சையின் பின்னர் முழுமையாக குணமடைந்து ஆரோக்கியமான பின்னரே மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று மருத்துவர் கூறினார். அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில், சித்தா மருத்துவ மையங்கள் மோசமான நிலையிலுள்ள கோவிட் - 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றன. கடுமையான அறிகுறிகள் உள்ளவர்கள் அரசு கோவிட்-19 மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து அனுப்பப்படும் அனைத்து கோவிட்-19 நோயாளிகளுக்கும் ஆரோக்கிய பெட்டகம் (ஹெல்த் கிட்) வழங்கப்படுகிறது என்று டாக்டர். காமராஜ் தெரிவித்தார். அந்த ஆரோக்கியப் பெட்டகத்தில் அமுக்குராச் சூரண மாத்திரைகள், நெல்லிக்காய் லேகியம் மற்றும் கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் உள்ளன. நெல்லிக்காய் லேகியம் தினமும் காலையிலும் இரவிலும் 5 முதல் 10 கிராம் வரை எடுக்க வேண்டும். அமுக்குராச் சூரணம் மாத்திரைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவுக்குப் பிறகு கொடுக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கிராம் கபசுரக்குடிநீர்ப் பொடியை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து கபசுரக் குடிநீரை எடுக்குமாறு அனைவருக்கும் அவர் அறிவுறுத்தினார். பெரியவர்கள் 30 மில்லி கபசுரக் குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு 15 மில்லி என்ற அளவில் கொடுக்க வேண்டும்.


கோவிட்-19 தொற்றுநோயை எதிர்ப்பதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியமானதாகும். ஆயுர்வேதம், சித்தா போன்ற ஒருங்கிணைந்த மருத்துவ முறை இதுவரை மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நிரூபித்துள்ளது, மேலும் இது கோவிட்-19 நோய் பரவுவதை நிறுத்தப் பெரிதும் உதவியது. தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்காக விஞ்ஞானிகள் இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கும்போது, ​​உலகம் முழுவதும் ஒரு தொற்றுநோயால் பிடிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், நம் முன்னோர்களின் ஞானம் நம் தேசத்தை இன்னும் உறுதியுடன் இருக்க உதவியுள்ளது.


Popular posts
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image