மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்


பக்தர்கள் இன்றி மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. 4 சிவாச்சாரியார்கள் நடத்திய திருமண சடங்குகளை பக்தர்கள் இணையதளத்தில் பார்த்தனர்.
மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்கும் மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில் ( உற்சவர் சன்னதி) நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. மீனாட்சிக்கு ஒரு பிரதிநிதியும், சுந்தரேசுவரருக்கு ஒரு பிரதிநிதியுமாக இருந்து திருமணத்தை நடத்தினார்கள்.
இதில் முதலாவதாக, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹ வாசனம், பஞ்ச கவ்யம், பாலிகை பூஜை, ரஷாபந்தன பூஜை (காப்பு கட்டுதல்) நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி பிரதிநிதிகள் மீனாட்சி – சுந்தரேசுவரருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பட்டாடைகள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுந்தரேசுவரருக்கு வெண்பட்டும், மீனாட்சிக்கு ஆரஞ்சு பட்டும், பிரியா விடைக்கு வாடாமல்லி கலர் பட்டும் அணிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீனாட்சி அம்மனுக்கு பிரதிநிதிகள் மங்கல நாண் அணிவித்தனர். இதையடுத்து பிரியாவிடைக்கும் மங்கலநாண் அணிவிக்கப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லாத காரணத்தினால் திருகல்யாண நிகழ்ச்சி ஆன் லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் ஆன் லைனில் பார்த்து பரவசம் அடைந்தனர்.
திருக்கல்யாண உற்சவத்தின் போது திருமாங்கல்ய மங்கல நாண் அணிந்துகொள்ள விரும்பும் தாய்மார்கள் காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்ள உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்கள் திருகல்யாணம் முடிந்ததும் தங்கள் வீட்டிலேயே புதிய மஞ்சள் கயிற்றை கட்டிக் கொண்டனர்.
இதேபோல் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக அழகர்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் மே 8 ல் நடக்கிறது. அந்த நிகழ்ச்சியும் இணைதளம் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Popular posts
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image