நாள்பட்ட தீவிர சிறுநீரக நோய் – சத்தமில்லாமல் கொல்லும் கொடிய நோய்


 


8 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 75,000 நபர்கள் நாட்பட்ட தீவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.


 


20,000-க்கும் கூடுதலான நோயாளிகளுக்கு டயாலிசிஸ் மற்றும் மாற்று சிறுநீரகம் பொருத்துதல் போன்ற மேம்பட்ட சிகிச்சைகள் அவசியமாக இருக்கின்றன


 


 


நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய் (CKD), இந்தியாவில் இளம் வயதினரில்  ஏறக்குறைய 10 சதவிகிதத்தினர் வரை பாதிக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் மெதுவாகவும் மற்றும் சத்தமே இல்லாமல் அமைதியாகவும் இது நுழைவதால், அக்காலகட்டத்தில் இதனை கண்டறிவது என்பது, அதிக சிரமமானதாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய்க்கு மிக பொதுவான காரணங்களாக நீரிழிவு (சர்க்கரை நோய்) மற்றும் உயர்இரத்த அழுத்தம் ஆகியவையே தொடர்ந்து இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசு, பூச்சிக்கொல்லிகள், காற்றில் மிதக்கும் துகள்கள், அதிக உடற்பருமன், புகை பிடித்தல், மதுவுக்கு அடிமையாக இருத்தல், அதிக அளவில் உப்பை உட்கொள்ளுதல் (ஒரு நாளுக்கு 12-15 கிராமுக்கும் அதிகமாக) மற்றும் மருத்துவரின் பரிந்துரைப்பின்றி வலி நிவாரணி மருந்துகளைப் (OTC) பயன்படுத்துதல் ஆகியவை இந்நோய்க்கான பிற இடர்காரணிகளாக இருக்கின்றன. உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படவிருப்பதையொட்டி இது குறித்துப் பேசிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை – சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் கே. சம்பத்குமார் விளக்கமளித்தார்.


  


இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் நீரிழிவு பாதிப்பு நேர்வுகளைக் கொண்டிருக்கிற மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. 30 சதவிகிதம் வரையிலான நீரிழிவு நோயாளிகளுக்கு நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய் ஏற்படுகிறது. குடும்பத்தில் வேறு யாருக்காவது சிறுநீரக நோய் இருந்த வரலாறு இருக்குமானால், அதுவும் ஒரு இடர்காரணியாக இருக்கக்கூடும். இரத்த சர்க்கரையையும், இரத்த அழுத்தத்தையும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறுநீரகத்தை நீண்டகாலம் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு அத்தியாவசியமானதாகும். அதிக அளவில் உப்பை உட்கொள்வது உயர்இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இதுவே சிறுநீரகம் பாதிப்படைவதற்கான முன்னோடியாகும். அளவுக்கு அதிக உடற்பருமன், உடலில் எதிர்மறையான ஹார்மோன் சுரப்பு சூழலுக்கு வழிவகுக்கிறது: சிறுநீரகங்களில் உள்ள மிக மென்மையான வடிகட்டல் அமைப்புகளை இது சேதப்படுத்திவிடும். விவசாயத்தில் பயன்படும் வேதிப்பொருட்களின் எச்சங்கள் மற்றும் தொழிலகங்களினால் வெளியிடப்படும் கழிவு வெளியேற்றங்கள், கிராமத்தில்  வசிக்கும் மக்களுக்கு நாட்பட்ட, தீவிர சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு காரணமாக  இருக்கிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வு என்று உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டு CKD U என அழைக்கப்படுகிறது. இதில் உள்ள U என்ற எழுத்து, காரணம் என்ன என்று தீர்மானிக்கப்படாத தோற்ற காரணியை குறிக்கிறது,” என்று டாக்டர் சம்பத்குமார் மேலும் விளக்கமளித்தார்.


 


மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை – சிறுநீரகவியல் துறை தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் ஆர். ரவிச்சந்திரன், CKD நோயை கண்டறிவது குறித்து விளக்குகையில், “நாட்பட்ட தீவிர சிறுநீரக நோயானது, மூன்று வழிகளில் கண்டறியப்படுகிறது. மூன்று மாதங்களுக்கும் அதிகமாக இரத்தத்தில் இருக்கிற யூரியா மற்றும் கிரியாட்டினன் என்று அழைக்கப்படுகின்ற புரதங்களில் குறிப்பிட்ட அளவு தொடர்ந்து நிலையான அதிகரிப்பு இருப்பது: மூன்று மாதங்களுக்கும் அதிகமாக சிறுநீர் கழிப்பில் புரதம் வெளியேறுவது தொடர்ந்து அதிகரித்து காணப்படுவது. அல்ட்ராசோனோகிராம் போன்ற இமேஜிங் பரிசோதனைகளில் சிறுநீரகத்தின் அளவும், கட்டமைப்பும் இயல்புக்கு மாறாக காணப்படுவது. இவைகள் மூன்றும் சேர்ந்திருப்பதோ அல்லது இவைகளுள் ஏதாவது ஒன்றோ இருப்பது கண்டறியப்படுமானால், அந்த பாதிப்பு நிலையானது, நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய் என அறியப்படுகிறது,” என்று விளக்கமளித்தார்.


 


CKD நோயாளிகளின் தரவுகளை தொகுத்து அறிக்கையளிக்கிற ஒரு தன்னார்வ அமைப்பான இந்தியன் CKD ரெஜிஸ்ட்ரி எனப்படும் பதிவகத்தின்படி, 8 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் தமிழ்நாடு, ஏறக்குறைய 75,000 சிகேடி நோயாளிகளின் தாயகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 25,000 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்றுப்பதியம் ஆகிய வடிவங்களில் மேம்பட்ட சிகிச்சை தேவைப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில், சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்காக அரசு சுகாதார சேவை அமைப்புகளில் மிகப்பெரிய முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இப்போது நன்றாக செயல்படுகிற டயாலிசிஸ் மையங்கள் இருக்கின்றன. டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்றுப்பதிய சேவைகளை அதிகரிப்பதற்காக சிறப்பான முயற்சிகளை மாநில அரசு எடுத்துவருகின்ற போதிலும், இந்த நவீன, மேம்பட்ட உயர் சிகிச்சைகளை இத்தகைய நோயாளிகளில் மிகக்குறைந்த அளவிலேயே பெற்று பயனடைய முடிகிறது. இந்த மேம்பட்ட சிகிச்சைகளுக்கு மிக அதிக செலவாகின்ற காரணத்தால் தொடர்ந்து வளர்ந்து வருகின்ற சிகேடி என்ற இந்த பெரும் ஆபத்தை சமாளிப்பதற்கான சிறந்த வழிமுறையாக இருப்பது இந்நோய் வராமல் முன்தடுப்பதற்கான, ஆரோக்கியத்தைப்பேணும் நடவடிக்கைகள் மட்டுமே.


 


தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிறுநீரக மாற்றுப்பதிய மையங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இம்மாநிலத்தில் சிறுநீரக மாற்றுப்பதிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை தமிழ்நாடு அரசின் டிரான்ஸ்டன் (TRANSTAN) என்ற அமைப்பு நிர்வகிக்கிறது. இதன் அமைப்பு ரீதியிலான வெற்றிகரமான செயல்பாடு, இந்தியாவிலுள்ள பிற மாநிலங்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரி திட்டமாக இருந்திருக்கிறது.


 


இந்நோய்க்கு அதிக இடர்வாய்ப்புள்ள வயது பிரிவு மற்றும் பாலினம் குறித்து விளக்கமளித்த டாக்டர். கே. சம்பத்குமார், “எந்தவொரு வயது பிரிவினரையும் மற்றும் இரு பாலினத்தவரையும் சமஅளவில் சிகேடி பாதிக்கக்கூடும். ஆரோக்கியமான தாய்மார்கள், ஆரோக்கியமான சிறுநீரகங்களைக் கொண்ட குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். ஆகவே, எந்தவொரு சமூகத்திலும் சிறுநீரக நோய் வராமல் முன்தடுப்பு செய்யக்கூடிய சேவைகளில் அத்தியாவசிய தொடக்கப்புள்ளியாக இருப்பவை, தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து. பிறக்கும்போது குறைந்த உடல்எடையுடன் இருக்கும் குழந்தைகள், வாழ்நாளில் பிந்தைய நிலையில் நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை கொண்டிருக்கின்றனர்,” என்று கூறினார்.


 


நீரிழிவு மற்றும் உயர்இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள், சிகேடி நோய் சுமைக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவிற்கு பங்களிப்பை வழங்குகின்றன. எஞ்சிய மூன்றில் ஒரு பங்கிற்கு காரணமாக இருப்பவை குடும்ப பாரம்பரியமாக வரும் நோய்கள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள். தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் கடுமையான உடல்உழைப்பின்போது உடலி்ல் நீர்ச்சத்து குறைவதும் நீண்டகால அளவில் சிகேடி பாதிப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். வலி நிவாரணி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பின்றி, தொடர்ந்து பயன்படுத்துவது நீண்ட கால அளவில் சிறுநீரக செயல்பாட்டை மோசமாக்குவதில் ஒரு முக்கியமான காரணியாக இருப்பது இப்போது அறியப்பட தொடங்கியிருக்கிறது.” என்று டாக்டர் கே. சம்பத்குமார் மேலும் கூறினார்.


 


சிகேடி வராமல் எப்படி முன்தடுப்பு செய்ய முடியும் என்பது குறித்து பேசிய டாக்டர். ஆர். ரவிச்சந்திரன்,சிறுநீரக நோய் வராமல் தடுப்பதில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பல பிரிவுகள் உள்ளடங்குகின்றன. ஒரு வாரத்தில் 5 நாட்களுக்காவது தினசரி 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுப்பதற்கு, குறிப்பாக கோடைக்கால மாதங்களின்போது, தண்ணீர் உட்பட 2-2.5 லிட்டர் திரவ பானங்களை குடிப்பது அவசியம். உயர் இரத்தஅழுத்தத்திற்கு அளவுக்கதிகமாக உப்பை சேர்த்துக்கொள்வது ஒரு வலுவான இடர்காரணியாக இருப்பதால், உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைப்பது, வாழ்க்கையின் பிற்பகுதியில் சிறுநீரக நோய் வராமல் தடுக்கும். ஆரம்ப நிலையில் சிறுநீரக நோய் வெளியில் தெரியாமல் அமைதியாக நுழையக்கூடியது என்பதுதான் பொதுமக்களுக்கான முக்கியமான செய்தியாகும். உங்கது கால்கள் மற்றும் முகம் வீக்கமடைந்திருக்குமானால், சிறுநீரில் இரத்தக்கறை கலந்திருக்குமானால், சிறுநீர் கழிக்கும் அளவும், முறையும் சமீபத்தில் மாறியிருக்குமானால், கட்டுப்படுத்த சிரமமானதாக இரத்தஅழுத்தம் இருக்குமானால், பசியுணர்வு மிகவும் குறைந்திருக்குமானால், மிக எளிய செயல்களை செய்தவுடன் கூட எளிதாக நீங்கள் களைப்படைவீர்களென்றால் ஒரு மருத்துவரை உடனடியாக நீங்கள் சந்தித்து பரிசோதனை செய்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நீங்கள் உணரவேண்டும்,” என்று கூறினார்.


 


பொதுமக்கள் மத்தியில் நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய் பற்றிய விழிப்புணர்வு அளவு குறித்து பேசுகையில் டாக்டர். ரவிசந்திரன், பொதுமக்கள் மத்தியில் சிறுநீரக நோய்கள் குறித்து மிகக்குறைவாகவே விழிப்புணர்வு இருப்பதை உணர்ந்ததால் உலக சிறுநீரக சங்கம் (International Society of Nephrology), ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இரண்டாவது வியாழக்கிழமையை உலக சிறுநீரக தினம் என அறிவித்து, அதை அனுசரிக்க வேண்டும் என்ற ஒரு சிறப்பான முடிவை எடுத்தது. இந்த ஆண்டு உலக சிறுநீரக தினத்திற்கான கருப்பொருளாக “அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் சிறுநீரக ஆரோக்கியம் – முன்தடுப்பிலிருந்து நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை கிடைப்பதற்கு அனைவருக்கும் சம வாய்ப்பு” என்ற கருத்தாக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொது மக்களுக்கு தெளிவாக கற்பிப்பதை உறுதி செய்வதன் வழியாகவும் இந்நோய் வராமல் முன்தடுப்பதற்குரிய சேவைகளை வழங்குவதன் வழியாகவும் அடிப்படை பணிகளை நாம் தொடங்குவோம் என்றால், சிகேடி நோய் பாதிப்பு வராமல் தடுக்கவேண்டும் என்ற நோக்கமானது, நிச்சயமாக அடையக்கூடிய இலக்காகவே இருக்கும்.” என்று கூறினார்.


Popular posts
கொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image