கணவர்களை இழந்த பெண்களுக்கு நிதி திரட்ட 4500 கி.மீ. தூர சைக்கிள் பயணம்
ஐக்கிய நாடுகளின் அங்கீகாரம் பெற்ற லூம்பா அறக்கட்டளை சார்பில் நிதி திரட்ட சர்வதேச வழக்குரைஞரான கிரிஸ் பார்சன்ஸ் இந்தியாவில் 4 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரப் பயணத்தை சைக்கிளிலேயே மேற்கொள்ள இருக்கிறார். தனது பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி 45 நாள்களுக்குப் பிறகு காஷ்மீரில் நிறைவு செய்கிறார். இந்த சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கியது. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன் மற்றும் ஆஸ்டின், ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோர் சைக்கிள் பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.
கணவர்களை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை அவர் நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.
அறக்கட்டளையின் பணிகள் லார்டு லூம்பா கூறுகையில், ஐக்கிய நாடுகளின் கூற்றுப்படி சர்வதேச அளவில் 285 மில்லியன் அளவுக்கு கணவர்களை இழந்த பெண்களும், தந்தையர் இல்லாமல் 500 மில்லியன் குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் பல்வேறு பாகுபாடுகளைச் சந்தித்து வருகிறார்கள். அத்தகையவர்களின் நலன்களுக்காக நிதிகளைத் திரட்டி வருகிறோம். இதற்கு உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி நிதி திரட்டும் பணியில் கிரிஸ் உதவி வருகிறார். அவர் தொடர்ந்து உதவி செய்வதன் மூலம் இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்ய முடியும். இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை அவர் நிதி திரட்டித் தந்துள்ளார், என்றார்.